மொழி, இன, இடப் பெயராக அடையாளப்படுத்தப்பட்டு வந்த திராவிடம் என்பது, 19ஆம் நூற்றாண்டில் தான் முதன் முதலில் நவீன கால அரசியல் கோட்பாடாக பரிணாமம் பெற்றது. சமூகத்தில் நிலவிய ஆதிக்கங்களுக்கு எதிராக திராவிடம் முழங்கத் தொடங்கியது. சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதி ஆகிய கொள்கைகள் மூலம் தெற்கின் அடையாளமாக திராவிடம் உருவெடுத்தது. சமூக முன்னேற்றத்திற்கான பாதையாக அமைந்த திராவிடத்தை அறிந்த மக்கள், மாற்றத்தை நோக்கி பயணிக்கின்றனர்.
சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை அடிப்படைக் கொள்கைகளாக கொண்ட திராவிடத்தின் நோக்கம், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே. இதன் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், மருத்துவம், பாலினம், பொருளாதாரம் என சமூகத்தின் அனைத்து தளங்களிலும், அனைத்து மக்களையும் முன்னேற்றம் காணச் செய்வதே, திராவிடத்தால் நிகழ்ந்து வரும் மாற்றம். இந்த மாற்றம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக, திராவிடத்தை முன்னோக்கிச் செலுத்துகிறது.